"...அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி !
தனிப்பெருங்கருணை! அருட்பெருஞ்ஜோதி!... "
திருவள்ளுவர், திருமூலர், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், பட்டினத்தார், தாயுமானவர் என்று வாழையடி வாழையடியாக வரும் திருகூட்ட மரபில்,சென்ற நுற்றாண்டில், தமிழ் நாட்டில் வந்து உதித்தவர், திருவருட் பிரகாச வள்ளலார் இராமலிங்க அடிகளார்.
தமிழ் நாட்டில் தென்னார்க்காடு மாவட்டத்தில் சிதம்பரத்திற்க்கு வட மேற்கே சுமார் 16 கிலோ மீட்டர் துரத்தில் உள்ள மருதூர் என்ற கிராமத்தில் 1823 ம் ஆண்டில் அக்டோ பர் திங்கள் ஐந்தாம் நாள் ஞாயிற்றுகிழமை இராமலிங்க அடிகள் அவதரித்தார். தந்தையார் இராமையா பிள்ளை, தாயார் சின்னம்மை. இவர்களுக்கு அருட் பிரகாச வள்ளலார் ஐந்தாவது பிள்ளை.
இராமலிங்கம் தன் சிறு வயதில் தன் தமையன் சபாபதியிடம் ஆரம்ப கல்வி கற்றார். உலகியல் கல்வியில் வள்ளலாருக்கு நாட்டம் இல்லை. இறைவனைப்பற்றி பாடுவதிலேயே ஈடுபட்டார். கற்க வேண்டுயவற்றை இறைவனிடமே கற்றார்.
தாங்கள் சாப்பிடும் முன் அடியவர் யாருக்காவது உணவிட்டு மகிழ்வித்தல் சைவர்களின் பண்பு. வள்ளல் பெருமானின் அன்னை சின்னம்மாளும் தினமும் அடியவர்களுக்கு உணவிடுதலை வழக்கமாக கொண்டிருந்தார். நாளும் ஈசனை நினைத்து உருகும் குடும்பம் என்பதால் வள்ளலாருக்கு இளம் பருவத்திலேயே, பிற உயிர்கள் மீது அன்பு செலுத்தும் குணம் இருந்தது.
மக்களிடையே ஏற்றத்தாழ்வு இல்லை. மரணமில்லாப் பெருவாழ்வை அடைய எல்லோரும் தகுதி உடையவர்களே! அதற்கான முயற்சியை அனைவரும் மேற் கொள்ள வேண்டும், அதற்காக சமரச சன்மார்க்கத்தில் சேர வேண்டும் என்று வலியுறுத்தியவர்.
சன்மார்க்கச் சிந்தனையாளர்
தன் வாழ்வின் பெரும்பகுதியை சென்னையில் கழித்த இவர், நவீன சமுதாயங்களின் பிரச்சினைகளை உணர்ந்திருந்தார். அனைத்து சமய நல்லிணக்கத்திற்காகவும் சன்மார்க்கத்திற்காகவும் தன் வாழ்நாளை அர்ப்பணித்துப் பணியாற்றினார். இந்நோக்கத்தை அடையும் பொருட்டு சிதம்பரம் அருகே உள்ள வடலூரில் சத்திய ஞானசபையும் சத்திய தருமசாலையும் அமைத்தார். அவர் வாழ்ந்த காலத்தில் அவருடைய சிந்தனைகள் மிகவும் முற்போக்குடையதாக கருதப்பட்டாலும், தற்பொழுது உலகெங்கும் அவருடைய சிந்தனைக்கு ஒத்த கொள்கைகள் புரிந்துகொள்ளப்பட்டு பின்பற்றப்படுகிறது.
வள்ளலாரின் கொள்கைகள்
1.கடவுள் ஒருவரே. அவர் அருட்பெருஞ்சோதி ஆண்டவர்.
2.புலால் உணவு உண்ணக்கூடாது.
3.எந்த உயிரையும் கொல்லக்கூடாது.
4.சாதி, மதம், இனம், மொழி முதலிய வேறுபாடு கூடாது.
5.இறந்தவர்களை எரிக்கக் கூடாது. சமாதி வைத்தல் வேண்டும்.
6.எதிலும் பொது நோக்கம் வேண்டும்.
7.பசித்தவர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி முதலிய வேறுபாடு கருதாது உணவளித்தல் வேண்டும்.
8.கருமகாரியம், திதி முதலியவை செய்யக்கூடாது.
9.சிறு தெய்வ வழிபாடு கூடாது. அவற்றின் பெயரால் பலி இடுதலும் கூடாது.
10.எல்லா உயிர்களும் நமக்கு உறவுகளே. அவற்றைத் துன்புறுத்தக்கூடாது.
திருவருட்பா
இவர் பாடிய ஆறாயிரம் பாடல்களின் திரட்டு, திருவருட்பா என்று அழைக்கப்படுகிறது. இது ஆறு திருமுறைகளாக பகுக்கப்பட்டு உள்ளது. திருவருட்பா, முதலில் இராமலிங்கஅடிகளின் தலைமைச் சீடர் தொழுவூர் வேலாயுதனாரால் நான்கு திருமுறைகளாக வெளியிடபட்டது. பின்னர் ஐந்தாம், ஆறாம் திருமுறைகள் வெளியிடபட்டன. முன்னாள் தமிழக அறநிலையத்துறை ஆணையாளர் பாலகிருஷ்ணன், இராமலிங்கரின் உரைநடை, கடிதங்கள் முதலியவற்றைத் தனி நூலாகத் தொகுத்து வெளியிட்டார். பின்னர் ஊரன் அடிகளும் காலமுறை பதிப்பு வெளியிட்டுள்ளார்.
வள்ளல் பெருமான் பெருமை
பதவுரை, பொருளுரை தேவைப்படாத எளிமையா பாடல்களை எழுதியவர்.
“ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும்” என்று பாடல்களில் நேர்மறை எண்ணங்களை புகுத்தியவர்.
கருணையின் உச்சமாக, ‘வாடிய பயிரைக் கண்டதும் வாடினேன்’ என்று சொன்னவர்.
ஏனைய நாட்களிலும் பசியாற்றுவித்தல் நடந்தாலும், தைப்பூச திருநாள் அன்று வடலூரில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு பசியாற்றுவித்தல் நடைப்பெற்றுக் கொண்டிருக்கிறது.
கோரமான பசியிலிருந்து மனிதனை காக்க சிவன் எடுத்த அவதாரமாகவே வள்ளலாரை சைவர்கள் கருதுகின்றார்கள்.
ஒன்பது வயதில்
புராணச் சொற்பொழிவு செய்யும் அண்ணன் சபாபதிக்கு, ஒருமுறை உடல்நலம் குன்றியதால் ஒப்புக்கொண்ட சொற்பொழிவுக்குச் செல்ல முடியவில்லை. எனவே அவர், தம்பி ராமலிங்கத்திடம் சொற்பொழிவு நடக்கவுள்ள இடத்துக்குச் சென்று, சில பாடல்களைப் பாடி, தான் வரமுடியாத குறையைத் தீர்த்துவிட்டு வருமாறு கூறினார். அதன்படி ராமலிங்கம் அங்கு சென்றார்.
அன்றைய தினம் சபாபதியின் சொற்பொழிவைக் கேட்க ஏராளமானோர் கூடியிருந்த னர். அண்ணன் சொன்ன படியே சில பாடல்களை மனமுருகப் பாடினார் ராமலிங்கம். இதன்பின், அவரிடம் ஆன்மிகச் சொற்பொழிவு நிகழ்த்துமாறு அங்கு கூடியிருந்தோர் வெகுநேரம் வற்புறுத்தினர். எனவே, ராமலிங்கமும் அதற்கு இசைந்தார்.
அந்தச் சொற்பொழிவு இரவில் நெடுநேரம் நிகழ்ந்தது. அனைவரும் வியந்து போற்றினர். இதுவே அவருடைய முதல் சொற்பொழிவு. அப்போது அவருக்கு வயது ஒன்பது.
ராமலிங்கம் தன் பன்னிரண்டாம் வயதில் திருவொற்றியூர் சென்று வழிபடத் தொடங்கினார். அவர் வசித்துவந்த ஏழுகிணறு பகுதியிலிருந்து திருவொற்றியூருக்குத் தினமும் நடந்தே சென்று வழிபட்டு வருவது அவர் வழக்கம்.
அன்னையாக வந்தான் அர்த்தநாரி
ஒரு நாள் வள்ளலார் மிகுந்த பசியோடு திண்ணையில் படுத்திருந்தார். தினம் தினம் அடியார்களுக்கு உணவு படைத்திடும் அன்னையின் குழந்தைக்கு பசியெடுப்பதனால், சிவனே அன்னையாக மாறி உணவு படைத்திட்டான்.
குழந்தைக்கு பசிக்குமேயென உண்மையான அன்னை வந்து உணவு படைக்க, அன்னையே இப்போது தானே உங்கள் கையால் உணவு உண்டேன் என இராமலிங்கம் தடுமாற, வந்தது உயிர்களுக்கெல்லாம் உணவு படைக்கும் ஈசன் என எல்லோருக்கும் புரிந்தது.
முதல் ஜோதி
பலரது வற்புறுத்தலுக்கு இணங்க, ராமலிங்கம் தன் இருபத்தேழாவது வயதில் திருமணத்துக்குச் சம்மதித்தார். அவர் சகோதரி உண்ணாமுலையின் மகள் தனக்கோடியைத் திருமணம் செய்துகொண்டார்.
ராமலிங்கம் தங்கியிருந்த அறையில் விளக்குக்கு எண்ணெய் வைக்கும் மண்கலயம் ஒரு நாள் உடைந்துவிட, மணியக்காரரின் மனைவி புதுக்கலயம் ஒன்றை வைத்தார். அந்தக் கலயம் பழக்கப்பட வேண்டுமென்று அதில் நீர் நிரப்பிவைத்த மணியக்காரரின் மனைவி, பின்னர் அதைச் சுத்தப்படுத்தி எண்ணெய் நிரப்பிவைக்க மறந்துபோனார்.
அன்றிரவு ராமலிங்கம் வெகுநேரம் எழுதிக் கொண்டிருந் தார். விளக்கில் ஒளி மங்கும்போதெல்லாம் கலயத்தில் இருந்த நீரை, எண்ணெய் என்று கருதி விளக்கில் ஊற்றிக் கொண்டே இருந்தார். விடியும்வரை விளக்கு பிரகாசமாகத் தண்ணீரில் எரிந்த அற்புதம் அன்று நிகழ்ந்தது!
சமரச சுத்த சன்மார்க்க சத்தியச் சங்கம்
கருங்குழியில் தங்கியிருந்தபோது 1865-ஆம் ஆண்டு ராமலிங்கம்
“சமரச வேத சன்மார்க்க சங்கம்” என்ற அமைப்பை உருவாக்கினார். பிற்காலத்தில் அந்தப் பெயரை “சமரச சுத்த சன்மார்க்க சத்தியச் சங்கம்” என்று மாற்றியமைத்தார்.
எல்லா உயிர்களுக்கும் பசியாற்றுவிக்கும் ஈசனின் செயலை வள்ளலாரும் செய்ய எண்ணம் கொண்டார்.
கருங்குழிக்கு அருகிலுள்ள வடலூரில், பார்வதிபுரம் என்னும் கிராமத்து மக்களிடம் எண்பது காணி நிலத்தைத் தானமாகப் பெற்று, 1867|ஆம் ஆண்டு, மே மாதம் 23&ஆம் தேதியன்று அங்கு சமரச வேத தருமச்சாலையைத் தொடங்கினார். பின்பு, அதை அவரே “சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலை” எனப் பெயர் மாற்றம் செய்தார்.
"...அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி !
தனிப்பெருங்கருணை! அருட்பெருஞ்ஜோதி!... "... அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி !
தனிப்பெருங்கருணை! அருட்பெருஞ்ஜோதி!...
என்னும் மந்திரத்தை ஆண்டவர் வெளிப்படையாக எனக்கு அருளியிருக்கிறார். தயவு கருணை, அருள் என்பன ஒரு பொருளைக் குறிக்கும். அதுவே ஒப்பற்ற தயவுடைய பேரறிவாகும். இதுதான் உண்மை. இதை உணர்ந்து செயல்படுங்கள். நீங்கள் அனுபவித்து மகிழும்படி ஆண்டவர் வருவார். அவர் வந்தவுடன் எல்லா நன்மையும் பெற்றுக் கொள்வீர்கள். இது சத்தியம்! ஆண்டவாரின் கட்டளை.''
இவ்வாறு வள்ளல் பெருமான் அருள் உபதேசம் செய்த மூன்று மாதங்கள் கழித்து ஒருநாள் சித்திவளாகக் குடிலில் தாம் வழிபட்டு வந்த அருட்பெருஞ்ஜோதி ஆண்டவாரின் அருஉருவமான திருவிளக்கைத் தம் குடிலில் இருந்து வெளியே எடுத்து வைத்து, ''இதைத் தடைபடாது ஆராதியுங்கள்; இந்தக் கதவைச் சாத்திவிடப் போகிறேன். ஆண்டவர் இப்போது தீப முன்னிலையில் விளங்குகிறபடியால் இனி கொஞ்ச காலம் எல்லோரும் உங்களுடைய காலத்தை வீணாகக் கழிக்காமல் நான் பாடி இருக்கும் நினைந்து நினைந்து' என்று தொடக்கமுடைய 28 பாசுரங்கள் அடங்கிய பதிகத்தில் கண்டபடி தெய்வ பாவனையை இந்தத் தீபத்தில் செய்யுங்கள். நான் இப்போது இந்த உடம்பில் இருக்கிறேன். இனி எல்லா உடம்பிலும் புகுந்து கொள்வேன் " என்று திருவாய் மலர்ந்து அருளினார்.
இதன் பின்னர் 1874-ம் ண்டு சனவாரித் திங்கள் 30 ம் நாள் வள்ளலார் தமது சித்திவளாகக் குடிலின் கதவைச் சாத்திக் கொண்டு ஞானசித்தி பெற்றுவிட்டார். சில நாட்களுக்குப் பின் சித்திவளாகக் குடிலைத் திறந்து பார்த்தபோது ".. திறந்து பார்ப்பின் வெற்று அறையாகத்தான் இருக்கும்..." என்று வள்ளலார் கூறியிருந்தது போலவே அது வெற்று அறையாகவே இருந்தது*** இவ்வாறு மறைவதுதான் ஞானசித்தியாகும். அருட்பெருஞ் சித்தியாகும். மரணமில்லாப் பெருவாழ்வு என்பதும் இதுதான். சித்திபெற்ற ஞான யோகியின் உடல் தரையில் வீழ்வதில்லை; மண்ணுக்கோ, நெருப்புக்கோ இரையாவதும் இல்லை.. 1878 ஆம் ஆண்டு தென்னாற்காடு மாவட்ட ஆட்சி இதழில் [S.A.District manual 1878- J.H. Garsteen] ஜார்ஸ்டீன் என்பவர் தம்மை மறைத்துக்கொண்டதுபற்றிக் குறித்துள்ளார். இதுவே நமக்குக் கிடைத்து இருக்கும் மிகப் பழமையான சான்றாகும்.
இது 1910 ம் ஆண்டு எழுதப்பெற்றது. எனவே மிகப் பழமையான இச் சான்றுகள் மூலம் வள்ளலார் தம்முடம்பை மறைத்துக்கொண்டார் என்பது தெளிவாகிறது.
" ஊன் செய்த மெய்யும் உயிரும் உணர்வு ஒளிமயமாக் கோம்செயவே பெற்றுக் கொண்டேன்... " " ஊன் உடம்பே ஒளியுடம்பாய் ஓங்கிற்க ஞான அமுதெனக்கு நல்கியதே..." மன்னுகின்ற பொன் வடிவும் மந்திரமாம் வடிவும் வான்வடிவும் கொடுத்தெனக்கு முடியுஞ் சூட்டி பன்னுகின்ற தொழில் ஐந்தும் செய்திடவே பத்து..." இங்ஙனம் காணப்பெறும் அடிகளை, வள்ளலார் தம் ஊன் உடலை மறைத்துக் கொண்டார் என்பது முற்றும் உண்மையே என்பதற்குச் சான்றாகக் கொள்ளலாம்.
அருட்பிரகாச வள்ளலார் ஞானசித்தி பெற்று நான்கு ஆண்டுகள் முடிந்தன. இதன் பின் சத்திய ஞானசபை வழிபாட்டை மீண்டும் தொடங்க சில அன்பர்கள் தொடங்க விரும்பினார்கள். ஆறு பேர்கள் கொண்ட ஒரு குழு உருவாகியது. இந்த குழுவினர் தாங்கள் விரும்பிய வண்ணம் வள்ளலார் வகுத்த வழிப்பாட்டு விதிகளுக்கு மாறாக, சில புதிய ஏற்பாடுகளை வகுத்துக் கொண்டு
ஞானசபை வழிபாட்டைத் தொடங்கினார்கள். இந்த புதிய வழிபாடு 1878 ஆம் ஆண்டு சத்திய ஞானசபையில் ஆரம்பிக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அந்தக் குழுவினர் ஞானசபை வழிப்பாட்டில் அவர்கள் விரும்பிய வேறு சில ஏற்பாடுகளையும் செய்துக்கொண்டார்கள். இதற்கு பிறகு 1881 ஆம் ஆண்டில் ஏழுபேர் கொண்ட ஒரு குழுவினர் கூடி தாங்கள் விரும்பிய வண்ணம் சில மாற்றங்களைச் செய்துக்கொண்டு இப்போது ஞானசபையில் நடைபெற்று வருகிற வழிபாட்டு முறைகளை வகுத்துச் செயல் படத்தொடங்கினர்.
அவர் இயற்றி அருளிய திரு அருட்பா உலகம் எங்கும் பரவி மனித குலத்திற்கு வழிகாட்டும்.
அருட்பெருஞ் ஜோதி ! அருட்பெருஞ் ஜோதி!
தனிப்பெருங் கருணை! அருட்பெருஞ் ஜோதி!
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.