Sunday, July 8, 2012

சேக்கிழார் அளித்த அருள்நெறி

 sஉலகம் உய்வதற்கு உவந்தளித்த அருளாளர்களில் சேக்கிழார் அளித்த பெரியபுராணம் எல்லாப் புராணங்களைக் காட்டிலும் பெரிதாக உணர்பவர்கள் பக்குவிகள்.அரண்மனையில் வாழ்ந்த சேக்கிழார் அடியார்கள் வாழ்வை நேசிக்கக் காரணம் அலகில் சோதியனான, அம்பலத்தான் தடுத்தாண்டு அரசவை சுகத்தில் சலிப்படைய வைத்து திருதொண்டர்புராணம் பிரகாசிக்க அருளியுள்ளான்.
   எதற்குமே ஒரு நல்ல தொடக்கம் அவசியம். சேக்கிழார் தொடங்கும்போதே ஆரம்பித்த அருள் வல்லபம் முடியும் வரை அருள் உணர்வுகள்  ஆழ்ந்து பிரகாசிக்கிறது. 



         உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன் என்ற வார்த்தைக்கு வள்ளலார் பல மாதங்கள் சொற்பொழிவு செய்தார். இறைவனை அடைவதற்கு அறிவு பயன்படாது. அன்புதான் பயன்படும். எனவே உலகெலாம் அறியப் பயன்படும் அறிவால் இறைவனை அளக்க முயல்வது பாமரத்தனம் என கூறியவர். உடல்,உயிர், உலகம் எல்லாமாயும் இருக்கின்ற அலகில் சோதியனாக இருக்கும் அந்தபரம்பொருள் அடியார்களில் உச்சந்தலையில் நின்று  ஆடும் கூத்தனாகத் தொழிற்படும் இறைவனது பாதச் சிலம்பை வாழ்த்தி வணங்குகிறேன் என்றார். 

 

          மெய்யுணர்தல் நிலையில் ஒரு முழு யோக ரகசியத்தையும் முதற்பாட்டிலேயே சொல்லிவிட்டார். இங்கு கவனிக்க வேண்டியது தொண்டர்கள் பலர் கோவில் மற்றும் சிவலிங்க வழிபாடு செய்தவர்கள், புறப் பூஜையின் வல்லமையில் இருந்தவர்கள். ஆனால் சேக்கிழார் ஆழ்ந்த சிவயோகிகள் தவத்தைச் செய்யும்போது ஏற்படும் அனுபவத்தை முதல்பாட்டில் கூறியதிலிருந்து எவ்வளவு சாதனை செய்திருக்கிறார் எனத் தெரிய வருகிறது. இந்தப் பாடலில் நான்கு வார்த்தையாக அவன், அவன் என்றே வருகிறது."அரியவன்,வேணியன், சோதியன், அம்பலத்தாடுவான்" இதை ஆழ்ந்து நோக்கினால் மணிவாசகரும்   "சிவன் அவன் சிந்தையுள் நின்றதனால்  அவன் அருளாலே அவன் தாழ் பணிந்து" என இரண்டு வரிகளில் நான்கு முறை பயன்படுத்தியுள்ளார்.அதே போல "அவனும் அவனும் அவனை அறியார், அவனை அறியில் அறியுமாறு ஒன்றில்லை அவனும் அவனும் அவனை அறியில் அவனும் அவனும் அவன் இவனாமே" என்கிறார். பாடல் முழுவதுமே அவன் அவன் என ஏன் இவ்வளவு சந்தோசம்?  உரிமை எடுத்துக்கூறினார்கள்? என்றால் உலகையே படைத்துக் காக்கும் பரம்பொருள் ஊனுக்குள் நின்று ஒளிந்து நடமாடுகின்றான் என்பதால் இறைவனை அவன் அவன் என வியந்து பாராட்டுகிறார். 


 
       
            தனது அடுத்தட பாடலில், "இந்த ஊன் எடுத்த பிறவியின் பயன் மானடனம் செய் வரதர் போனதால் தொழ" என்கிறார். அதாவது புருவமத்தியில் இறைவனின் திருக்கூத்தும், சிலம்போசையும் கேட்பதுதான் பிறவி எடுத்ததன் நோக்கமாகும். இவ்வளவு யோக ஆற்றலைப் பெற்ற சேக்கிழார் மிகவும் அவையடக்கத்தோடு அடியார்கள்  பெருமையை, "அளவு கூட உரைப்பது அரிது ஆயினும் அளவுஇல் ஆசை துரப்ப அறைகுவேன்" என்கிறார். அதாவது அடியார்கள் பெருமையை அளக்க முடியாத நிலையில் எனக்குள் உள்ள ஆசையின் உந்துதலால் பாமரர்கள் பணிதர்களைப் புகழ்வதைப் போல முயல்கிறேன் என்றார். எவ்வளவு உருக்கமான உணர்வு அடியார்கள் மீது இருந்திருந்தால் இப்படி கூறுவார்? அதோடு நில்லாமல் அடுத்த பாடலில் ஒரு "சுணங்கன்ஐ  ஒக்கும் தகைமையேன்" அதாவது பெரிய கடலை குடித்து ஏப்பமிடுவேன் எனப்புகுந்த நாய் எப்படி தண்ணீரைக் குடித்து தனது இயலாமையை வெளிக்காட்டியதோ அதுபோல எனது செயல் அடியார்கள் பெருமையைக் கூறப்புகும் முடிவு எனக் கூறியவிதம் அடியார்கள் சைவ நெறியில் எவ்வளவு போற்றப்பட்டார்கள் என்பது வெள்ளிடைமலையாகும். இதையே "படமாடற்கோவில்" என்றும் அடியார்களை "நடமாடற்கோவில்" என்றும் கூறினார்.
                
       ஆதிசங்கரர் அருமையாகக் கூறுவார் ஒருவன் கொலை செய்தால் அவன் பிரம்மகத்திதோசம் , பிரம்மாவிடம் சரணடைந்தால் தீர்ந்துவிடும். அதைவிட மேலான பிரம்மாவின் சாபம் இருந்தால் திருமால் நீக்கி விடுவார். திருமாலின் சாபம் இருந்தால் கூட சிவம் நீக்கிவிடுவார். சிவத்தின் சாபத்தைக் கூட சிவனடியார்கள் நீக்கி விடுவார்கள். ஆனால், சிவனடியார்கள் சாபத்தை மட்டும் இந்த மூன்று தேவர்கள் கூடினாலும் தீராது என்பார். அடியார்களுக்கு அவ்வளவு பெருமை சேர்த்ததே சிவனார்தான். 




                  உலக மதத்தார் அனைவரும் எல்லாப் புகழும் இறைவனுக்கே என்பார்கள். இறைவன் நாமத்தைப் பெருமை சேர்க்க வேண்டும் என்பார்கள். இங்கு பெரியபுராணத்தில் அடியார்கள் பெருமையை சிவம் உலகறியச் செய்ததுதான் பெருமை. இறைவனின் பெருமையை மனிதர்கள் வியந்து பேசுவது போய், அடியார்கள் பெருமையை இறைவன் பேசிய நுட்பங்கள் அளவில் அடங்கா. 
                 
           சுந்தரமூர்த்தி நாயனாருக்காக திருவாரூர் வீதியில் வீதிவிடங்கப் பெருமான் நடந்து சென்றார் பரவை நாச்சியாரை மணமுடிக்க. எத்துணை அன்பு! அப்பர் சுவாமிகளின் பசியைப் போக்க பொதிச்சோறு தலையில் சுமந்து போய் கொடுத்தார். புராணத்தில் உள்ளே நுழையும் போது ஆற்றொணாகண்ணீர் அரும்புதட்டும். 
                  
               மனிதன் இறைவன் புகழை எடுத்துச் சொல்ல ஆர்வமாகிறான் ஆனால் இறைவன் அடியார் பெருமையைக் காலச்சுவடு கரைத்துவிடாதபடி நிலைக்க வைக்கிறார். மரணம் என்பது கூட மா ரணம்தான் இது கூட அடியார் வாழ்வில் இருக்காது. அடியார்கள் எப்போதும் பிணமாக மாட்டார்கள்; மறந்துவிடுவார்கள் அல்லது ஜோதியில் கலந்துவிடுவார்கள். மரணம் என்பதே ஒரு தண்டனைதான் அது அடியார்கள் வாழ்வில் நிகழக்கூடாது. சிவநேயம் உள்ளிருந்தால், சிவனே எம்முள் இருந்தால் எப்படி சிவம் சவமாக முடியும்? சவம் என்பது சிவம் பிரிந்த உடம்பாகும்.
 "கூத்தன் புறப்பட்ட கூட்டிற்கு காக்கை    கவரின் கண் கண்டார் பழிச்சில் என் "    என்பார் திருமூலர். கருணைக்கடல் சிவம் தாம் பயன்படுத்திய உடலை சவமாக்குவாரா? சிவம் திருக்கூத்து நிகழ்த்திய உடல் சவமாகாது இது சத்தியம். மாநடம் செய் வரதர் தாள்தொழா உடம்பு மட்டுமே மரணம் அடையும். அதனால்தான் வள்ளலார்,
என்மார்க்கம் இறப்பொழிக்கும் சன்மார்க்கம் என்றார். சாவு என்பது இறைதரிசனம் பெறாத உடம்புக்கு மட்டுமே ஏற்படும் விபத்து ஆகும். அடியார் வாழ்வில் அது நிகழாது. 
"ஆபத்தை நீக்கி வளர்த்தே சற்றும் அசையாமல் அவியாமல் அடியேன் உளத்தே தீபத்தை வைத்தது பாரீர் திருச்சிற்றம்பலத்தே திருநட ஜோதி " என்பார் வள்ளலார். 
        
            அடியார் பெருமையை சொல்லப்புகும் சேக்கிழார் முதலில் மனுநீதிச் சோழனின் கதையைக் கூறப்போகும்போது திருவாரூர் பற்றிக் கூறும்போது, சிவத்தின் அடிமுடி தேடி பிரம்மா அன்னவாகனம் எடுத்து மேல்நோக்கியும் திருமால் பன்றி அவதாரம் எடுத்து அடியை நோக்கி போயும் அடிமுடி காண முடியாத பெருமான் வந்தொண்டருக்குத் தூது போய் நடந்த செந்தாமரை அடி நாறுமால் என்கிறார். 
  "அரி அயற்கு அறிதற்கு அறியானே அடியவற்கு அருளிய அற்புத நேயா" என்பார் அருணகிரியார். அதுபோல திருமாலும் பிரம்மாவும் காணமுடியாத செந்தாமரை அடிச்சுவடு திருவாரூர் வீதியில் பதிந்ததாகச் சேக்கிழார் வர்ணிக்கிறார். 
          
       அப்படிப்பட்ட நகரில் நீதி வழுவா நெறிமுறையோடு ஆட்சி செலுத்தி  வந்த மனுநீதிச் சோழன்  ஆட்சியில் அடுத்த பட்டத்திற்கு உரிய குலக்கொழுந்தாகிய இளங்குமரன் தனது தேரின் மீதேறி ஊர்வலம் வரும்போது ஒரு இளம்பசுவின் கன்று துள்ளிக்குதித்து தேர்க்காலில் சிக்கி இறந்து விட்டது. இளவரசு பதறித் துடிக்கிறார். அந்தணர்களை அழைத்து ஏதாவது பரிகாரம் உளதா? என வினவுகிறான். இந்த நேரத்தே கன்றை இழந்த பசு தனது கொம்புகளால் அரண்மனையில் உள்ள ஆபத்து மணியை ஒலிக்கச் செய்தது. மனுநீதி பதறித் துடிக்கிறார். இங்கு சேக்கிழாரின் கவிநயம் மிகச் சிறப்பாக உள்ளது. "பழிப்பறை முழக்கோ? ஆர்க்கும் பாவத்தின் ஒலியோ?" அதாவது பழிச்சொல் பாவங்கள் சேர்ந்து ஒலிப்பது போல உள்ளதே! அதோடு அடுத்த வரியில் பின்னால் நடக்கப் போவதைக் குறிப்பால் உணர்த்தும் விதமாக "வேந்தன் வழித்திரு மைந்தன் ஆவி கொளவரும் மறலி ஊர்திக் கழுத்து அணி மணியின் ஆர்ப்போ?" அதாவது வேந்தனின் மகனைக் கொல்லவரும் எமனின் வாகனமாகிய எருமைக்கடா வாகனத்தின் கழுத்துமணி ஓசை போலக் கேட்டதாக வர்ணகிக்கிறார். வேந்தன் வினாவுகிறான் மந்திரிமார்கள் நடந்த கதையைக் கூறுகிறார்கள். மன்னன் என்ன பழவினையோ இப்படி பாவம் நேர்ந்தது ? எனப் புலம்புகிறான். மந்திரிமார்கள் அந்தணர் விதித்த முறை வழி நிற்றல் அறம் என்றார்.   ஆனால் மன்னர் இதை ஏற்க மறுக்கிறார். 


    இந்த நியாயம் "குலக்கன்றை இழந்து அலறும் கோ உறுநோய் மருந்து ஆமோ?" என்கிறார். நீங்கள் சொல்வதை நான் கேட்டால் அது சலக்கு என்கிறார். இப்படிச் செய்தால் தர்மம்தான் சலியாதோ? என்கிறார். பண்டை மனுவின் நீதி பாவி மனுவால் தொலைந்தது என வையகம் வசை பாடாதோ? என்கிறார். மன்னவன் எப்படி இருக்க வேண்டும் என்று சேக்கிழார்,  
     மாநிலம் காவலன் ஆவான் 
     மன்னுயிர் காக்கும் காலைத் 
     தான் அதனுக்கு இடையூறு 
     தன்னால், தன் பரிசனத்தால்
     ஊனமிகு பகை திறத்தால் 
     கள்வரால், உயிர்கள் தம்மால்
     ஆனபயம் ஐந்தும் தீர்த்து 
     அறம் காப்பான் அல்லனோ?     கூறுகிறார்.
உடனே ஒரு மந்திரியை அழைத்து குலக்கொழுந்தாக உள்ள ஒரே வாரிசு குமாரனைத் தேரில் இட்டு கொல்க! என்றார். அந்த மந்திரி இதைச் செய்ய மனம் இல்லாமல் தானே தற்கொலை செய்கிறான். பிறகு மன்னவன் தானே தேரைச் செழுத்தி தனது மகனைக் கொல்ல தர்மம் தன்வழிச்  செல்கை கடன் என்று கூறி மகனைக் கொன்றுவிட்டார். மன்னவர்கள் கண்மழை பொழிந்தார்கள்; வானவர்கள் பூமழை சொரிந்தார்கள். அண்ணல் அவன் கண் எதிரே அணிவீதி மழவிடைமேல் விண்ணவர்கள் தொழ நின்றான் வீதிவிடங்கப் பெருமான். அதாவது 63 நாயன்மார்களில் 15 பேருக்கு மட்டுமே இடப வாகனத்தில் எழுந்தருளி காட்சி தந்தார் அதில் மனுநீதிச் சோழனும் ஒருவர். 
            
         விடை மீது காட்சி தருதல் சற்று தகுதி கூடியவர்களுக்கு மட்டுமே. இங்கு கவனிக்க வேண்டியது மனுநீதிச் சோழர் பெரிய சிவபக்தி உள்ளவராகக் காட்டப்படவில்லை. நீதிமான், உலக மதங்கள் அவர்களுடைய கடவுளை வழிபட்டவர்களுக்கு மட்டுமே மோட்சம் தந்தாகக் கூறும். ஆனால் இங்கே நீதி தவறாது ஆட்சி செய்தவர்களுக்கே சிவம் காட்சி தந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
         
          இந்த மனுநீதிச் சோழனைப் பற்றி சிலப்பதிகாரத்தில் கண்ணகியைப் பாண்டிய மன்னன் நீ எங்கிருந்து வருகிறாய்? எனக் கேட்டதற்கு அரும் பெற்ற புதல்வனை ஆழியில் மரித்தோன்   பெரும் பெயர்ப் புகார் என்பதியே!  என்கிறாள். அவ்வளவு சிறப்பு தமிழ் மரபு கண்டிருக்கிறது. தர்மநீதியை உலகறியச் செய்ய மனுநீதிச் சோழர் மூலமாக அந்த பாத்திரத்தை இறைவனார் தூக்கி நிறுத்துகிறார். பிறகு இறந்த மகனும் வருகிறான்; கன்றும் வருகிறது. இங்கு ஆழமான ஒரு வரி வருகிறது.
  "முன்னவனே முன் நின்றால் முடியாத பொருள் உளதோ?"  முன்னவனகிய சிவன் முன் நீரால் முடியாதது என்பது எதுவுமேயில்லை. இறைவன் நேரடியாகக்  காட்சி தந்து விட்டால் அப்புறம் மரணம் என்பதே இல்லை. எனவே ஆழ்ந்த சிவாலயத்தில் இறையருளை நாடினால் நிச்சயம் இடப வாகனாரூட  தரிசனம் எல்லா உயிர்களும் பெற்று இன்புற முடியும். தொடர்ந்து பெரியபுராணம் அருள் மனம் விரிக்கும். தொடர்ந்து அருள் நெறியைப் படியுங்கள்..

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.